உலகில் கட்டுமானத்துறை தொடர்பான முன்னணி நிறுவனத்திற்கு பிரதமர் விஜயம்

உலகில் கட்டுமானத்துறை தொடர்பான முன்னணி நிறுவனமான நோர்வே நாட்டின் புவித் தொழிநுட்ப நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க் தலைமையிலான தூதுக் குழுவினர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

நோர்வே, ஒஸ்லோ நகரில் அமைந்துள்ள நோர்வே புவித் தொழிநுட்ப நிறுவனத்தின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கடந்த 5ஆம் திகதி அங்கு விஜயம் செய்த பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினரை அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கால் ஹென்ரிக் (Mr. Karl Henrik) வரவேற்றார்.


அதன்பின்பு நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நோர்வே புவித் தொழிநுட்ப நிறுவனத்தின் முறைமைகள் தொடர்பாக ஹென்ரிக் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினருக்கு விளக்கமளித்தார்.


அந்த நிறுவனம் இலங்கையின் தொல்பொருளியல் இடங்களைப் பாதுகாத்தல், மண்சரிவு மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல் என்பவற்றுக்கு ஏற்கனவே பங்களிப்பு வழங்கி வருவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.


புவித் தொழிநுட்ப நிறுவனம் பல துறைகளில் புத்தாக்கங்களை மேற்கொண்டுள்ளதுடன், கடற்கரைக்கு அப்பால் மீள்புதுப்பிக்கத்தகு மின்சக்தி உற்பத்திக்கு காற்றாலைகளை நிறுவுதல், கடலின் மத்தியில் பாரியளவிலான மீன் வளர்ப்பு நிலையங்களை நிறுவுதல், மிதக்கும் பாலங்களை நிர்மாணித்தல் போன்ற பணிகளை உலகம் முழுவதும் மேற்கொள்கிறது.


இப்பணிகளுக்காக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வுகூடத்திற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினர் மேற்கொண்டனர்.


இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹேஷா விதானகே, பிரதம அமைச்சரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நோர்வே நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் அருஷா குரே, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.