பொலிஸுக்கு சிகெரட் கொண்டுவர கடைக்குச் சென்ற, பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவை உருவாக்கிய ஜனாதிபதியின் மகன்

அது 1978ஆம் ஆண்டு. கொழும்பு வோட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு ஆடம்பர வீட்டில் பாதுகாப்புக்காக வீசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. வீட்டின் பாதுகாப்புக்காக வேண்டி புதிதாக வந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காலை நேரத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தார். புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர், அந்தநேரத்தில் புகைபிடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். எனினும், அவருக்கு சிகெரட் எடுத்துவருவதற்கு கடைக்கு அனுப்ப ஒருவரும் இருக்கவில்லை. அவ்வேளை அந்த ஆடம்பர வீட்டிலிருந்து காரொன்று வெளியில் செல்வதற்கு ஆயத்தமானது. வீட்டின் கேட் வாசலில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபள், ஒரு விசில் ஒலியை எழுப்பிஅந்த மோட்டார் காரை நிறுத்தினார். காரின் ஓட்டுநர் ஆசனத்தில் இருந்த மனிதர் கண்ணாடியை கீழ்இறக்கி பொலிஸ் கான்ஸ்டபளை பார்த்து சிரித்தார்.
"என்ன அதிகாரி அவர்களே. உங்களுக்கு என்ன தேவை" என காரிலிருந்த மனிதர் பொலிஸ் அதிகாரியைப் பார்த்து மிகவும் தாழ்மையுடன் வினவினார்.

பொலிஸ் அதிகாரி 50 ரூபா நோட்டை காரிலிருந்த மனிதரின் கையில் கொடுத்தார். அந்தக் காலத்தில் சிகெரட் பக்கெற் ஒன்றில் விலை 20 ரூபாவாக இருந்தது. பொலிஸ் அதிகாரி காரில் இருந்தவரிடம் பணத்தைக் கொடுத்து, சிகெரட் கொண்டுவருமாறு கடுமையான குரலில் கட்டளையிட்டார்.

"அதிகாரி அவர்களே. நான் அவசர வேலைக்காக வெளியில் செல்கின்றேன். வருவதற்கு கொஞ்சம் நேரமாகும். தாமதமாக சிகரெட் கொண்டுவந்தால் பரவாயில்லையா ? " என்று காரில் இருந்த மனிதர் தாழ்மையுடன் கேட்டார்.

"அதற்குப் பராவியில்லை. நீங்கள் வருகின்ற நேரத்திற்கு கொண்டுவந்து தாருங்கள்" என கான்ஸ்டபள் கூறினார்.

பின்னர், கார் ஆடம்பர வீட்டிலிருந்து வெளியில் சென்றது. சில மணிநேரத்திற்குப் பின்னர் அந்தக் காரானது வோட் பிரதேசத்தில் அமைந்துள்ள அந்த வீட்டிற்குள் நுழைந்தது. அவ்வேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபள் வாயில் கேட் கடமையில் இருக்கவில்லை. அவர் தமது வேலை நேரத்தை முடித்துக்கொண்டு ஓய்வெடுப்பதற்காக விடுதிக்கு சென்றிருந்தார்.காரில் வந்த மனிதர் தனது வலது கையில் சிகெரட் பக்கெற் மற்றும் மீதிப் பணத்தையும் வைத்துக்கொண்டு வாயில் கேட்டில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபளை தேடிக்கொண்டிருந்தார். அவ்வேளையில், ஆடம்பர வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிகாரிகள் தடுமாற்றமடைந்தனர்.

"என்ன சேர், ஏதாவது பிரச்சினையா" என்று ஆடம்பர வீட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் அதிகாரி கேட்டார். " ஒரு பிரச்சினையும் இல்லை. வாயில் கேட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், அவருக்கு சிகெரட் வாங்கிவரும் படி எனக்கு பணம் தந்தார். அந்த உத்தியோகத்தர் எங்கு இருக்கிறார். நான் இதை அவருக்கு கொடுக்கவேண்டும்" என்று காரில் வந்த அந்த மனிதர் எந்த தடுமாற்றமும் இல்லாமல் கூறினார்.

அதனைக் கேட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தமது முகங்களை பார்த்துக்கொண்டனர். வாயில் கேட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபளின் கட்டளையின் பிரகாரம் சிகெரட் எடுத்து வந்தவர் வேறு யாரும் அல்ல. இலங்கையில் 5/6 மக்கள் பலத்தைப் பெற்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் ஒரே மகனான ரவீ ஜெயவர்தன ஆவார்.

" சேர் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள், அவர் மிகவும் பாரதூரமான தவறை செய்திருக்கின்றார். நாங்கள் அவரை வேலையிருந்து இடை நிறுத்தி, அவரை கைது செய்கின்றோம்" என ஜனாதிபதி அவர்களின் வீட்டில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் அதிகாரி ரவீ ஜெயவர்தன அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொண்டதுடன், அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

" இல்லை, இல்லை அந்த மனிதருக்கு தொந்தரவு செய்யவேண்டாம். அவரை வேலையிலிருந்து இடைநிறுத்தத் தேவையில்லை. அந்த அதிகாரி என்னை அடையாளம் தெரியாததனாலேயே அப்படிச் செய்திருப்பார்" என்று ரவீ ஜெயவர்தன மிகவும் சாதராணமாக பதிலளித்தார்.

ரவீ ஜெயவர்தனவை சிகெரட் கொண்டுவருவதற்காக கடைக்கு அனுப்பிய பொலிஸ் கான்ஸ்டபள் வேலையிலிருந்து இடைநிறுத்தப்படவில்லை. அவர் கைதுசெய்யப்படவில்லை. அந்த அதிகாரி நீண்டகாலமாக ஜனாதிபதியின் வீட்டில் கடமையாற்றினார். ரவீ ஜெயவர்தன என்பவர் எப்படிப்பட்ட அமைதியான சுபாவமுடையவர் என்பதை தெரிந்துகொள்வதற்கு இந்த நிகழ்வு சிறந்த உதாரணமாகும். தமது தந்தையிடம் இருந்த எல்லையற்ற அதிகாரங்களில் ஒருபோதும் தலையிடாத அந்த அமைதியான மனிதர் இன்று உயிருடன் இல்லை. பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவை உருவாக்கியதன் மூலம் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் முக்கிய புள்ளியாக செயற்பட்ட இந்த அமைதியான மனிதர் வாழ்வைவிட்டு சென்றுள்ளார்.

எந்தவொரு அதிகாரியும் தன்னை "சேர்" என்று அழைப்பதை ரவீ ஜெயவர்தன விரும்பவில்லை. அவர் தன்னுடன் இருந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு தன்னை "ரவீ " என்று அழைக்குமாறே கூறினார்.

நன்றி : திவயின