உடனடியாக செயல்படக் கூடிய தீயணைப்பு படகு

ஆழ்கடலில் தீ சம்பவங்களுக்கு உள்ளாகும் கப்பல், படகுகள் போன்றவற்றை உடனடியாக நெருங்கி தீயை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது உடனடியாக செயல்படக் கூடிய தீயணைப்பு படகொன்றின் வெள்ளோட்டம் இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியின் தலைமையில் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சோலோ மெரின் லங்கா நிறுவனத்தினால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 35 கடல் மைல் வேகத்தில் செயல்படக்கூடியது.
மணித்தியாலத்திற்கு 6 இலட்சம் லீட்டர் தண்ணியை 120 மீட்டர் தூரத்திற்கு பீச்சியடிக்கக் கூடிய வசதிகளை கொண்டுள்ளது.
தரையில் இருந்து 200 கடல் மைல் தூரத்திற்கு தீயை அணைக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. இதேபோன்று மீண்டும் தரையை வந்தடைய கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.
BELUGA-18 என்ற இந்த தீயணைப்பு வல்லத்தில் 6 பணியாளர்களுடன் செயற்படக்கூடிய வசதிகளும் உண்டு. இவர்களுக்கு கடலில் இடம்பெறும் தீ சம்பவங்களை கட்டுப்படுத்தக்கூடிய பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் போன்றவற்றினால் தீ சம்பவங்களுக்கு உள்ளாகும் கப்பல் அல்லது படகுகளின் தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான 8000 லீட்டர் இரசாயனத்தையும் இந்த தீயணைப்பு படகு கொண்டுள்ளது.
தீயணைப்பு சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சம்பந்தப்படட இடத்தை அடையக் கூடிய தொழிநுட்ப வசதியையும் இது கொண்டுள்ளது.