கழிவகற்றல் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதில் அனைத்து நிறுவனங்களும் உரிய நடைமுறையை பின்பற்றவேண்டும் - ஜனாதிபதி

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கழிவகற்றல் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக அனைத்து நிறுவனங்களும் இணைந்து உரிய நடைமுறையை பின்பற்றவேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான பொறுப்புக்களை வகிக்கும் பிரதான நிறுவனங்களுக்கிடையே உரிய ஒருங்கிணைப்பு காணப்படாமையே கழிவு முகாமைத்துவம் பலவீனமடைவதற்கு பிரதான காரணமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நிறுவனமும் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென்று இதன்போது தெரிவித்தார்.
கொழும்பு நகரின் கழிவு முகாமைத்துவத்தைப் போன்றே நகரை அழகுபடுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
விகாரமஹாதேவி பூங்கா மற்றும் பேரைவாவியைச் சுற்றியுள்ள சுற்றாடல் வலயம் உள்ளிட்ட சில இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாமை மற்றும் அந்த இடங்கள் உரியவாறு பேணப்படாமை தொடர்பாக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன்போது அதிகாரிகளை அறிவுறுத்திய ஜனாதிபதி அந்த திருத்தவேலைகளை துரிதமான மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
கழிவுகளை அகற்றல் தொடர்பாக ஒழுங்குபடுத்துவதற்கு பொலிஸ் சுற்றாடல் பிரிவுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி , கழிவுகளை முறையற்ற விதத்தில் வெளியேற்றும் நிறுவனங்களை ஊடகங்களில் சுட்டிக்காட்டுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தினார்.
உரிய கழிவகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்புகள், தோட்ட வீடுகள் மற்றும் குறைந்த வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாதசாரிகளுக்கான நடைபாதையை பேணல் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தவேலைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களின் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்ரிய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா உள்ளிட்டோரும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் பங்குபற்றினர்.