காற்றின் வேகம் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ அளவான மழை பதிவாகக்கூடும்.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.