புத்தளம் மொஹத்துவாரம் கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்

புத்தளம் மாவட்டத்திலுள்ள மொஹத்துவாரம் கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் செய்தார்.

மொஹத்துவாரம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பிரதேச மக்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தினால் மொஹத்துவாரம் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் முதலாவது தவணைக் கொடுப்பனவும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

கல்பிட்டி மற்றும் மொஹத்துவாரம் பிரதேசங்களுக்கு பயணிக்கும் மொஹத்துவார சிங்கள வித்தியாலய மாணவ மாணவியர்களுக்கு போக்குவரத்து வசதிக்கான படகொன்றினை பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் புத்தகங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பன்டார நாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் சுமல் திசேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.