கிழக்கில் ரீ கப் சர்வதேச சைக்கிளோட்டப்போட்டி ஆரம்பம்

சர்வதேச ரீ கப் சைக்கிளோட்டப் போட்டி கிழக்கு மாகாணத்தின் பாசிக்குடா பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது.

இவ்போட்டியில் 70க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் நிறைவடையவுள்ளது.

மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டியின் மொத்தத் தூரம் 350 கிலோமீற்றர்களாகும்.

முதற்கட்டப் போட்டி இன்று பிற்பகல் மஹியங்கனையில் நிறைவடையும். அதன் தூரம் 133 கிலோமீற்றர்களாகும்.

இந்த மூன்று நாள் போட்டியில் இலங்கை தேசிய அணியும், ஜனாதிபதி அணியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், கஸகஸ்தான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், லாவோஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் இதில் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.