இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

60 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளன. மற்றைய சத்திர சிகிச்சை கூடத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவில் பூர்த்தியடைந்து விடுமென சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

பழைய சிகிச்சைக் கூடங்களில் கிருமிகள் பரவும் ஆபத்து காணப்படுகின்றது. அதனால், இவற்றைப் புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.இருதய நோயாளர்களுக்கான சிகிச்சைகளை விசேட வைத்தியர்கள் நாடு பூராகவும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் அந்த சேவையை பாராட்டியுள்ள சுகாதார அமைச்சர் 24 மணி நேரமும் சுயமாகவே இந்த வைத்தியர்கள் சிகிச்சையில் ஈடுபடுவது ஏனைய வைத்தியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.