சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை சில தினங்களில் நீக்கப்படும் - ஜனாதிபதி

அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை எதிர்வரும் சில  தினங்களில் நீக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
 
சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு இவ்வாறான விடயங்களுக்கு இடமளித்தாலும், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கும் ஏதாவது ஒரு முறை இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
 
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து பேசிய போது இதனைக் கூறியுள்ளார். 
 
இந்தச் சந்திப்பு டோக்கியோவின் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்றது. கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் என்பன சமூகத்தின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனினும், இலங்கையில் சிலர் இந்த வளங்களை நாட்டை சீர்குலைப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். அதனால், இந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பான புதிய வேலைத்திட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும். இதன் போது அனைத்து பிரஜைகளும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதேவை இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். தொழில்வாண்மையாளர்கள், வர்த்தகர்கள், மாணவ சங்க பிரதிநிதிகள், போன்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்தோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.