ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பொருளாதார பேரவையின் முதலாவது அமர்வு

நாட்டின்  பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட  தேசிய பொருளாதார பேரவை முதற்தடவையாக நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
 
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, சரத் அமுணுகம, சுசில் பிரேம ஜயந்த, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சமரதுங்க, தேசிய கொள்கைகள்  மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் சாந்த பண்டார  மற்றும் தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன் ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்றினார்கள்.
 
 
உள்நாட்டு விவசாயம் மற்றும் தைத்தொழில் துறைக்கு முன்னுரிமை வழங்கி, தேசிய பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வது தேசிய பொருளாதார பேரவையின் பொறுப்பாகுமென தெரிவித்த ஜனாதிபதி , அது தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் தேவையான சந்தர்ப்பங்களில் அரச துறை, தனியார் துறை மற்றும் தொழில் முயற்சியாளர்களையும்  அழைத்து கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.
 
 
விசேடமாக வறுமையை ஒழித்து கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக அமுல்படுத்துவது தேசிய  பொருளாதார  பேரவையின் குறிக்கோளாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
 
பொருளாதார கொள்கைகள், அரச நிதி நடவடிக்கைகள், அரச கடன் முகாமைத்துவம் மற்றும் நிதித்துறை செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
 
பிரதேச  மட்டத்தில்  இடம்பெறும்  உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கான வருடாந்த  வரவுசெலவு  திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக செலவிடாமல்  திறைசேரிக்கு திருப்பியனுப்புவதனால் நாட்டின் அபிவிருத்திக்கும், மக்களின் நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்பு தொடர்பில்  ஜனாதிபதி அதகாரிகளின் கவத்துக்கு கொண்டு வந்தார்.
 
 
மாவட்ட மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அலுவலர்களின் பங்கேற்புடன் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டியதன்  முக்கியத்தவம் மற்றும் அதற்காக வழங்கப்படும் நிதியை குறித்த அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்ததல் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
 
 
கிராம   மட்டத்தில் நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் முறையற்ற கடன் வழங்கல் காரணமாக கிராமிய மக்களின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பிலும் ஜனாதிபதி அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
 
 
இலங்கையின்  அபிவிருத்திக்கு  நேரடியாக  தந்திரோபாய ரீதியில் முக்கியத்தும் மிக்க கொள்கை, உடன்படிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல் தேசிய பொருளாதார பேரவைக்குரிய விடயமாகும்.
 
 
தேசிய  பொருளாதார  பேரவை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை கூடவுள்ளது. பேரவையின் செயலாளர் நாயகமாக பேராசிரியர் லலித் சமரக்கோனை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 
 
Read 35 times