மகாவலி விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி

29வது முறையாக நடைபெற்ற வருடாந்த மகாவலி விளையாட்டு விழாவின் நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

மகாவலி விவசாய சமூகத்தினரின் பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நேற்று இடம்பெற்ற நிறைவு விழா பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.


நாட்டின் 10 மகாவலி வலயங்களை சேர்ந்த சுமார் 4500 விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டு விழாவில் தமது திறமைகளை வெளிக்காட்டியதுடன், வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டன.


2017 மகாவலி விளையாட்டு விழாவின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசை ஹூருளுவெள வலயத்தைச் சேர்ந்த யூ ஆர் டீ ராஜபக்ஷ ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

 

400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 56 வினாடிகளில் ஓடிமுடித்து புதிய சாதனை படைத்து 2017 மகாவலி விளையாட்டுப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக வளவ வலயத்தைச் சேர்ந்த நதீஷா ராமநாயக ஜனாதிபதியிடமிருந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

 

போட்டிகளில் 82 புள்ளிகளைப் பெற்று மகாவலி பீ வலயம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 63 புள்ளிகளைப் பெற்று மகாவலி எச் வலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. விக்டோரியா வலயம் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

 

இம்முறை போட்டிகளில் 5 சாதனைகள் படைக்கப்பட்டன. 2018 மகாவலி விளையாட்டுப் போட்டிகள் வளவ வலயத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ளது.

 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, மகாவலி விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் திறமைகளை மகாவலி விளையாட்டுப் போட்டிகளுடன் மட்டுப்படுத்திவிடாது தொடர்ச்சியாக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வளங்களை வழங்குவது குறித்த அனைத்து தரப்பினரினதும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கோட்டபய ஜயரத்ன, மகாவலி நிலையத்தின் பணிப்பாளர் அநுர லேகமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.