இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாடி வீட்டுத்திட்டம் - பிரதமர்

சமீபத்திய இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்திற்கு அமைவாக உயர்மற்ற மாடிவீட்டுத்திட்டமொன்றை பரீட்சார்த்தமாக மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடாபாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களும் அனர்த்த வலயங்களில் வாழும் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக அவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உயரமற்ற மாடிவீட்டு முறையொன்றை பரீட்சார்த்தமாக மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
சமீபத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான விடயங்களைக் கண்டறியும் பொருட்டு நெலுவ பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற காலி மாவட்டக் கூட்டத்திலேயே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
வெள்ளத்தின் காரணமாக முழுமையாக சேதமடைந்த பாடசாலைகள், அத்தியாவசிய பெருந்தெருக்களை மீண்டும் நிர்மாணிப்பதில் கேள்வி மனு கோரலில் தங்கியிருக்காது திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். சேதமடைந்த பொலிஸ் நிலையங்களை மீண்டும் நிர்மாணிக்கும் பொழுது இரண்டு மாடிக் கட்டடங்களாக அவற்றை அமைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்ததாவது:
பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை மதிப்பீடு செய்து அது தொடர்பான அறிக்கையை கூடிய விரைவில் பெற்றுக்கொண்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பணத்தை வழங்கி அவர்களது வர்த்தக முயற்சிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.
கால்நடை துறையை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த மக்களுக்கு மீண்டும் கால்நடைகளை வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான நிதியை அவர்களுக்கு வழங்கி கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட வசதிகளைப் போன்று பாதிக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் பாரிய பிரச்சினைகள் உண்டு. வெள்ளத்தின் போது தொழிற்சாலைகளில் இருந்து, காப்புறுதி செய்யப்படாத தயாரிக்கப்பட்ட தேயிலை குறித்த விடயங்களைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு வருடக் காலப் பகுதிகளில் வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக இரண்டு மின்பிறப்பாக்கி இயந்திரங்களை விநியோகிப்பதன் முக்கியத்துவமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கும் அரச அதிகாரிகளைப் போன்று எதிர்க்கட்சி அரசியல் வாதிகளும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதனால் மக்களின் வாழ்க்கை நிலையை குறுகிய காலத்திற்குள் மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மேலும் தெரிவித்தார்.