சஹ்ரான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான தகவல்கள் வழங்கியது முஸ்லிம் மக்களே

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பற்றி பாதுகாப்புப் பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல்களை தெரிவித்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் அவர் நேற்று சாட்சியம் அளித்துள்ள போதே காத்தான்குடி பொலிஸாரும், தௌஹீத் ஜமாத் அமைப்பும் ஒத்துழைப்புடன் பணியாற்றியதாகவும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.
தௌஹீத் ஜமாத் பற்றி காத்தான்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய பிரதியையும் அவர் சமர்ப்பித்தார். தௌஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு பற்றி முஸ்லிம் மக்களே கூடுதலான தகவல்களை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அல்குர் ஆனுக்கு அமைவாக செயற்படுவதாக தௌஹீத் ஜமாத் அமைப்பு போலி பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு தேர்தல் காலத்தில் சஹ்ரான் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அசாத் சாலி கூறினார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு சவூதி அரேபியா நிதியுதவி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இலங்கையர்களாக வாழக்கூடிய நாட்டை ஏற்படுத்த வழிசெய்யுமாறும் அசாத் சாலி தெரிவுக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். அப்துல் ராஸிக் என்பவர் பற்றி தாம் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்ததாகவும், அவர் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக அசாத் சாலி தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தியும் சாட்சியம் அளித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழு பற்றி 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தாம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவிடம் தகவல்களை வழங்கியதாக ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.