இந்தியாவில் , மீண்டும் பிரதமர் மோடி அரசாங்கம்

இந்திய பொதுத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாரதீய ஜனத்தாக் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவில் அரசாங்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, 68 வயதான நரேந்திர மோடி தொடர்ந்து 2ஆவது முறையாக பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
இதையடுத்து, தனிபெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார். இத்தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதற்கடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
இதன்பின்னர், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவது தாமதமானது. இதனால் வாக்கு எண்ணும் பணி நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. நள்ளிரவு 1 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 345 தொகுதிகளில் வெற்றி, முன்னிலை வகித்தது. பாஜக தனித்து 254 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 49 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதன்மூலம் 303 தொகுதிகளில் பாஜகவின் வெற்றி உறுதியாகியிருந்தது.
சிவசேனை 11இல் வெற்றியும், 7இல் முன்னிலையும் பெற்றிருந்தது. சிரோமணி அகாலிதளம் 2இல் வெற்றி பெற்றிருந்தது. லோக் ஜனசக்தி 5இல் வெற்றியும், 1இல் முன்னிலையும் பெற்றிருந்தது. ஐக்கிய ஜனதா தளம் 15இல் வெற்றியும், 1இல் முன்னிலையும் பெற்றிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு மொத்தம் 6,74,664 வாக்குகள் கிடைத்தன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வென்றிருந்தது. மேலும் 12 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 1 தொகுதியில் முன்னிலை வகித்தது. தேசியவாத காங்கிரஸ் 4இல் வெற்றியும், 1இல் முன்னிலையும் பெற்றிருந்தது.
ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றியும், 17 தொகுதிகளில் முன்னிலையும் வகித்தது. திரிணமூல் காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றியும், 5 தொகுதிகளில் முன்னிலையும் வகித்தது. ஒடிஸாவை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 12, பகுஜன் சமாஜ் 10, சமாஜவாதி 5, தெலங்கானா ராஷ்டிர சமிதி 9, தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலை வகித்தன.
ராகுலுக்கு வயநாட்டில் வெற்றி; அமேதியில் தோல்வி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில், 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி. சுனீரை 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
அனந்த்நாக் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங், மைன்புரி தொகுதியில் 94,000 வாக்குகள் வித்தியாசத்திலும், அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆஸம்கர் தொகுதியில் 2.59 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளரான சாத்வி பிரக்யா சிங், போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர், திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரனை சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் புதிய சாதனை:
குஜராத் மாநிலம், நவ்சாரி தொகுதியில் பாஜக மூத்த எம்.பி. சி.ஆர். பாட்டீல், 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், இதுவே அதிகப்பட்ச வெற்றி விகிதம் ஆகும். உத்தரப் பிரதேச மாநிலம், மச்சில்ஷர் தொகுதியில் பாஜகவின் போலாநாத் 181 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதுவே மிகக்குறைந்த வெற்றி விகிதம்.
இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நாம் அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம். அனைவரது நம்பிக்கையும் நமக்குத் தேவை. வலுவான, கட்டுக்கோப்பான இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.
மக்களின் தீர்ப்புக்கு மரியாதையளிப்பேன்: மோடிக்கு ராகுல் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மரியாதையளிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மேலும், தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது, மக்களே முதலாளிகள் எனத் தெரிவித்தேன். மக்களின் தீர்ப்புக்கு நான் மரியாதையளிக்கிறேன்.
பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் வேறுவேறு சிந்தனைகள் உள்ளன. ஒன்று நரேந்திர மோடி, பாஜகவின் சிந்தனை; மற்றொன்று காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாகும். இரு கட்சிகளுக்கும் இரு மாதிரியான தொலை நோக்குப் பார்வைகள் உள்ளன. மக்களின் நலனுக்காக, பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். கட்சித் தொண்டர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். தோல்வியோ, வெற்றியோ அஞ்சத் தேவையில்லை. ஒருங்கிணைந்து போராடி காங்கிரஸ் சிந்தாந்தத்தை வெற்றி பெறச் செய்வோம்.
மக்களவைத் தேர்தலில் தோற்றுவிட்டதால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடி விரைவில் முடிவெடுக்கும் என்று கூறினார்.

தலைவர்கள் வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் பாஜகவுக்கு பிரதமர் மோடி மிகச் சிறப்பான வெற்றியை பெற்று தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொது செயலாளர் சுரேஷ் ஜோஷி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாஜகவுக்கு கிடைக்க வெற்றி, தேசியவாத சக்திகளுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.