சீனாவில் 'லங்கா குமரு' காட்டூன் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு

சீன - இலங்கை இராஜதந்திரத் தொடர்புகளுக்கு 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு 'லங்கா குமரு' காட்டூன் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

பீஜிங் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்த பீஜிங் ககு மீடியா (Beijing KAKU Media) நிறுவனத்தினால் உருவாக்கப்படும் இந்த 'லங்கா குமரு' காட்டூன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வு பீஜிங் நகர கெரி ஹோட்டலின் பூதொன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை வரலாற்றில் சீன தேசத்திற்குச் சென்ற ஓர் அரச குமாரன் தொடர்பான உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு 30 பாகங்களைக் கொண்டதாக இத்திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது.தற்போது திரைக்கதை மற்றும் ஏனைய ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன், இன்னும் ஆறு மாத காலப்பகுதிக்குள் தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்வதே நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.


பீஜிங் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை 9000 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு களிப்பதால், 'லங்கா குமரு' ஊடாக இலங்கை தொடர்பாக பாரிய பிரச்சார ரீதியான நன்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும் என இந்த நிகழ்வில் இணைந்து கொண்ட விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

பீஜிங் ககு மீடியா நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் சொங்யி, இலங்கை மற்றும் சீனாவுக்கிடையே மேலும் தொலைக்காட்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்வது தமது எதிர்கால எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டார். 'லங்கா குமரு' உருவாக்கத்தின் பின்பு அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் கருணாசேன கொடிதுவக்கு உள்ளிட்ட இருதரப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.