யாழ் தயாரிப்பான பல்சிகிச்சை நாற்காலியை கொள்வனவு செய்வதில் சுகாதார அமைச்சு ஆர்வம்

உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பல்சிகிச்சைக்கான நாற்காலிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல் சிகிச்கை நாற்காலியை ஒத்ததாக உள்ளுர் தயாரிப்பு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்த நாற்காலிகள் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் தயாரிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய நாற்காலி ஒன்றின் விலை 25இலட்சம் ரூபாவாகும். உள்ளுர் தயாரிப்பு நாற்காலியின் விலை 5இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இந்த நாற்காலிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த தயாரிப்புக்களில் ஈடுபடும் துறையினருக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாற்காலிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டாரவுக்கு இதன்போது ஆலோசனை வழங்கினார்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் ரிஸ்சோமேட் நிறுவனத்தினால் (Tissomed Technologies) நிறுவனத்தின் உரிமையாளர்  ராஜா குலேந்திரனினால் தயாரிக்கப்பட்ட இந்த நாற்காலி மற்றும் உபகரணங்களை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த தொழிற்துறை முயற்சியில் ஈடுபட்டுள்ள திரு குலேந்திரனின் தொழிற்துறைக்கு உதவி வழங்குவதாக அமைச்சர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.